மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜ.க.
மாலேகான் வழக்கு வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.;
Image Courtesy : PTI
புதுடெல்லி,
நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரகிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குர்கர்னி ஆகிய 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்(உபா) மற்றும் இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 17 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்கு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பொய்யான கருத்தை பரப்பி வந்ததாகவும், இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், "காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை திருப்திபடுத்த எந்த எல்லைக்கும் செல்லக்கூடும். இந்த வழக்கு வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக அக்கட்சி நன்கு திட்டமிட்டு நடத்திய சதி" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் காவி பயங்கரவாதத்தின் சாத்தியத்தை நிரூபிக்க காங்கிரஸ் செய்த முயற்சி தோல்வியடைந்தது என்று கூறிய அவர், நாட்டு மக்களிடம் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்று அவர் குற்றம்சாட்டினார். அதோடு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர் மற்றும் பிரசாத் புரோகித் ஆகியோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.