இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்; 'இரு நாடுகள்' தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது - மத்திய அரசு
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பொதுமக்கள் உயிரிழந்து வருவதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகள் தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிப்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது;-
"பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் கொள்கை நீண்டகாலமாக நிலைத்து இருக்கிறது. இஸ்ரேலுடன் இணைந்து அமைதியாக வாழும், பாதுகாப்பான, இறையாண்மை கொண்ட, சுதந்திரமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட 'இரு நாடுகள்' என்ற தீர்வை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையும், தற்போது நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பொதுமக்கள் உயிரிழந்து வருவதையும் இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. மேலும் போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு நீடித்த மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலையும், பாலஸ்தீனம் இடையே நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா., பிரிக்ஸ் உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இந்தியா மேற்கண்ட நிலைப்பாட்டை வலியுறுத்தி இருக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.