அமர்நாத் யாத்திரை ஒரு வழிப்பாதையில் மீண்டும் தொடக்கம்

கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை நேற்று ஒரு வழிப்பாதையில் மீண்டும் தொடங்கியது.;

Update:2025-07-31 20:12 IST

ஸ்ரீநகர்,

காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் இமையமலையில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்தகுகை கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தாண்டு யாத்திரை ஜம்முவில் இருந்து கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது.

38 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வருகிற 9-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.குகைக் கோவிலுக்குச் செல்ல பாரம்பரிய வழித்தடங்களாக பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பால்டால் பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதைகள் வழியாக நேற்று முன்தினம் வரை 3.93 லட்சம் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோவிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.இதற்கிடையே கடந்த சில நாட்களாக அங்கு பெய்ந்த கனமழையால் சாலைகள் சேதமடைந்து பாதுகாப்பற்றதாக காணப்பட்டதாலும், மோசமான வானிலை காரணமாகவும் இரு வழிகளிலும் இந்த யாத்திரை நேற்று  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து யாத்திரை நிறுத்தப்படுவது இது 2-வது முறையாகும். கடந்த மாதம் 17-ந் தேதி பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது 2-வது முறையாக யாத்திரை நிறுத்தப்பட்டது. இதனால் யாத்திரை சென்ற பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசிக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.

இந்தநிலையில் குறுகிய பால்டால் பாதையில் இருந்து நேற்று காலை அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது.ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் மலை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக நின்று யாத்திரை வரும் பக்தர்களை கண்காணித்தனர். பஹல்காம் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அங்கு யாத்திரை நிறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்