வரி விதிப்பு விவகாரம்: தேச நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்: பியூஸ் கோயல்
அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி விவகாரத்தில் தேச நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார். இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் அதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இரு தரப்பு இடையேயான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை வருகிற 25-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் நேற்று அறிவித்தார்.இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதால் அபராதமும் விதிக்கப் படும் என்று தெரிவித்தார்.
டிரம்ப் வரி விதிப்பு தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:- இந்த நடவடிக்கையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். நமது நாட்டின் நலனை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.