கேரளா: விலங்கியல் பூங்காவில் புலி தாக்கியதில் ஊழியர் காயம்

ஊழியர் உஷாராவதற்குள் அவருடைய தலையை, கூண்டு கம்பியின் இடையே புலியின் நகங்கள் பற்றி கொண்டன.;

Update:2025-07-27 21:04 IST

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இதில் ராமசந்திரன் நாயர் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர், பபிதா என்ற பெண் புலி ஒன்றின் கூண்டுக்கு அருகே இன்று காலை தூய்மை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த புலி ஆவேசமடைந்து அவரை தாக்கியுள்ளது.

சமீபத்தில் வயநாட்டில் இருந்து, பல்வேறு காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அந்த பெண் புலி, இந்த விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பார்வையாளர்கள் வரிசையில் இருந்தபடி அவர், தூய்மை செய்தபோது அந்த பெண் புலி அவரை நோக்கி பாய்ந்தது. இதில், அவர் உஷாராவதற்குள் அவருடைய தலையை, கூண்டு கம்பியின் இடையே புலியின் நகங்கள் பற்றி கொண்டன. பின்னர் அவரை விட்டு விட்டது.

இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன்பின்னர், அவர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டன. இதன்பின்பு, அவர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால், சிறிது நேரம் பூங்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்