கொடுமைப்படுத்திய கணவரின் குடும்பத்தினர் - வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்
தற்கொலைக்கு முன் சவுமியா பதிவு செய்த வீடியோ தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் நபரின் மனைவி சவுமியா காஷ்யப், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பாக சவுமியா காஷ்யப் பதிவு செய்த வீடியோ ஒன்று போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ளது. அந்த வீடியோவில், தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், தனது கணவருக்கு மறுமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிடுவதாகவும் சவுமியா கூறியுள்ளார்.
மேலும் தனது கணவரின் மாமா ஒரு வழக்கறிஞர் என்றும், அவர் தனது கணவரிடம், "உன் மனைவியை கொலை செய்துவிடு. உனக்கு பிரச்சினை வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியதாகவும் சவுமியா கண்ணீருடன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.