என் உடல் கோஹினூர் வைரத்திற்கும் மேலானது; ஆனால்... கருணை கொலைக்கு அனுமதி கோரிய ஆசிரியை

ஆசிரியை அவருடைய உடல் பாகங்களை எம்.ஜி.எம். மருத்துவ கல்லூரிக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.;

Update:2025-07-27 20:41 IST

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் குமாரி சந்திரகாந்தா ஜெதனி. ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியையான அவர், கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை தரும்படி கேட்டுள்ளார்.

இவருக்கு முன்பொரு முறை தவறான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதில், உடல் பாகங்கள் முடங்கின. இதனால், ஆசிரமத்திற்கு சென்றார். அப்போது அவருடைய உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. இதன்பின் வழக்கம்போல் அவரால் செயல்பட முடியவில்லை. நாளுக்கு நாள் அவருக்கு உடல் வலியும் அதிகரித்து வருகிறது.

இந்த வலியிலும் அவர், சுயநலமின்றி வாழ்ந்து வருகிறார். அவருடைய சொத்துகளை பள்ளி குழந்தைகளின் நலனிற்காக நன்கொடையாக கொடுத்து விட்டார். உடல் பாகங்களை எம்.ஜி.எம். மருத்துவ கல்லூரிக்கு உறுப்பு நன்கொடையாகவும் கொடுத்து விட்டார்.

இந்நிலையில், முர்முவிடம் அவர் விடுத்த வேண்டுகோளில், என்னுடைய உடல் பாகங்கள் எனக்கு பயன்படவில்லை. ஆனால் அவற்றால், யாருக்கேனும் பார்வை கிடைத்து விட்டாலோ அல்லது ஒருவருடைய உயிர் காப்பாற்றப்பட்டாலோ அவை கோஹினூர் வைரத்திற்கும் மேலான மதிப்பு மிக்கவை என அதில் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், நான் தற்கொலை செய்ய மாட்டேன். ஏனெனில், என்னுடைய மாணவ மாணவியருக்கு தைரியத்துடன் வாழ வேண்டும் என நான் போதித்து வருகிறேன். ஆனால், என்னுடைய உடல் எனக்கு ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து உடலெல்லாம் வலியாக இருக்கிறது. அதனால், கருணை கொலை செய்வதற்கு அனுமதி அளியுங்கள் என அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டு உள்ளார்.

எனினும், கருணை கொலை செய்ய இவருக்கு அனுமதி அளிப்பது என்பது, இந்திய நாட்டின் சட்டத்தின்படி அது சட்டவிரோதம் ஆகும். ஏனெனில், அது உள்நோக்கம் சார்ந்த செயலாகி விடும்.

Tags:    

மேலும் செய்திகள்