டிரான்ஸ்பார்மர் அருகே விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
சம்பவம் நடந்த அதே இடத்தில் ஏற்கனவே சுமார் 14 விலங்குகள் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 7 வயது சிறுவன் பஹத், இன்று காலை தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கிரிக்கெட் பந்து அங்கிருந்த ஒரு டிரான்ஸ்பார் அருகே விழுந்துள்ளது. பந்தை எடுப்பதற்காக சென்ற சிறுவன் பஹத் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பஹத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததும் மின்சாரத்தை துண்டிக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் மின்சாரத்தை துண்டிக்க தாமதம் ஏற்பட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில், அங்கிருந்தவர்களே போராடி சிறுவனை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது.
இந்த சம்பவம் நடந்த அதே இடத்தில் ஏற்கனவே சுமார் 14 விலங்குகள் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மின்சார வாரிய ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.