இந்தியாவில் நடப்பாண்டில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவங்களில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வழிபாட்டுத் தளங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.;

Update:2025-07-27 19:05 IST

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மானசா தேவி கோவிலில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் வழிபாட்டுத் தளங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் இந்தியாவில் ரெயில் நிலையங்கள், மகா கும்பமேளா, கோவில் நிகழ்ச்சிகள் உள்பட பல இடங்களில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவங்களில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த சில முக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்களின் பட்டியல்;-

* ஜூன் 4, 2025: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணி, தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் நடத்திய அணிவகுப்பு நிகழ்ச்சி ஒரு அசம்பாவிதமாக மாறியது. சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

* மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

* பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் செல்வதற்கு ரெயிலில் ஏற காத்திருந்தபோது இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.

* ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். கங்கையில் புனித நீராடுவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இடம் தேடி அலைந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

* ஜனவரி 8, 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

* டிசம்பர் 4, 2024: ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுனின் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார், ஒரு சிறுவன் படுகாயமடைந்தார்.

* ஜூலை 2, 2024: உத்தர பிரதேசத்தின் ஹாத்ராஸில் 'போலே பாபா' என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் ஹரி என்ற சாமியார் ஏற்பாடு செய்த 'சத்சங்கம்' (பிரார்த்தனை கூட்டம்) ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர்.

* மார்ச் 31, 2023: இந்தூர் நகரத்தில் உள்ள ஒரு கோவிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற 'ஹவன்' நிகழ்ச்சியின்போது, ஒரு பழங்கால கிணற்றின் மேல் கட்டப்பட்ட பலகை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

* ஜனவரி 1, 2022: ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

* செப்டம்பர் 29, 2017: மும்பையில் மேற்கு ரெயில்வேயின் எல்பின்ஸ்டோன் சாலை நிலையத்தையும் மத்திய ரெயில்வேயின் பரேல் நிலையத்தையும் இணைக்கும் குறுகிய பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.

* ஜூலை 14, 2015: ஆந்திர பிரதேசத்தின் ராஜமுந்திரியில் 'புஷ்கரம்' திருவிழாவின் தொடக்க நாளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோதாவரி நதிக்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவிந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

* அக்டோபர் 13, 2013: மத்திய பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோவில் அருகே நவராத்திரி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 115 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பக்தர்கள் கடந்து சென்ற ஆற்றுப் பாலம் இடிந்து விழப்போவதாக பரவிய வதந்தியால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

* நவம்பர் 19, 2012: பாட்னாவில் கங்கை நதிக்கரையில் உள்ள அதாலத் காட்டில் சத் பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், தற்காலிக பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

* நவம்பர் 8, 2011: அரித்துவாரில் கங்கை நதிக்கரையில் உள்ள ஹர்-கி-பவுரி படித்துறையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்.

* ஜனவரி 14, 2011: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு பகுதியில் கூட்டத்திற்குள் ஜீப் புகுந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 104 சபரிமலை பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

* மார்ச் 4, 2010: உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிருபாலு மகாராஜின் ராம் ஜானகி கோவிலில், சாமியார் கிருபாளிடம் இலவச உடைகள் மற்றும் உணவு பெறுவதற்காக மக்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 63 பேர் உயிரிழந்தனர்.

* செப்டம்பர் 30, 2008: ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் வெடிகுண்டு வெடித்ததாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 250 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

* ஆகஸ்ட் 3, 2008: இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் பாறைகள் சரிந்ததாக வதந்திகள் பரவியதை தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 162 பேர் உயிரிழந்தனர். மேலும், 47 பேர் படுகாயமடைந்தனர்.

* ஜனவரி 25, 2005: மராட்டிய மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தர்தேவி கோவிலில் வருடாந்திர யாத்திரையின்போது சுமார் 340 பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். படிக்கட்டுகளில் உடைக்கப்பட்ட தேங்காய்களை மிதித்து சிலர் வழுக்கி விழுந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டது.

* ஆகஸ்ட் 27, 2003: மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் கும்பமேளாவில் புனித நீராடும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 140 பேர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்