8 பேரை பலி கொண்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? அதிர்ச்சி தகவல் வெளியீடு
உத்தரகாண்டில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.;
அரித்துவார்,
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் இந்து மத வழிபாட்டு தலங்களில் ஒன்றான மானசா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்பதற்காக பக்தர்கள் திரளாக வருகை தந்தனர்.
இந்நிலையில், திடீரென கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நெரிசல் ஏற்பட்டது பற்றி பீகாரை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறும்போது, திடீரென பெரிய அளவில் கூட்டம் சேர்ந்தது. கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, மக்கள் அனைவரும் கீழே விழுந்து, காயமடைந்தனர் என கூறினார்.
இதுபற்றி மூத்த போலீஸ் சூப்பிரெண்டு பிரமேந்திரா சிங் தோபல் கூறும்போது, முதல்கட்ட விசாரணையில், கோவில் செல்லும் வழியில், மின் இணைப்பு வடம் ஒன்று துண்டிக்கப்பட்டு, படிகளில் விழுந்து விட்டது என புரளி கிளம்பியது.
யாரோ பரப்பி விட்ட இந்த புரளியால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது என்றார். இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், அரித்துவார்: 01334-223999, 9068197350 மற்றும் 9528250926, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம், டேராடூன்: 0135-2710334, 2710335, 8218867005 மற்றும் 9058441404.