'மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால் உரிமைகளால் எந்த பயனும் இல்லை' - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
நீதியை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) வடக்கு மண்டல பிராந்திய மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நாட்டின் கடைமட்டத்தில் இருக்கும் குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இணைந்து உறுதி செய்ய வேண்டும். இதை நோக்கமாக கொண்டுதான் NALSA செயல்படுகிறது. லடாக், வடகிழக்கு மாநிலங்கள், ராஜஸ்தான் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் NALSA தனது பணிகளை மேற்கொள்கிறது. உரிமைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால், அந்த உரிமைகளால் எந்த பயனும் இல்லை.
கடந்த 35 ஆண்டுகளில் காஷ்மீர் விவகாரத்தை கையாள்வதில் சில குறைபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை நீக்க நாம் பாடுபட வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையிலான இந்த உரையாடல் ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தரும். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் என அனைத்து சமூகங்களும் ஒன்றாக வாழ்ந்த பாரம்பரிய காஷ்மீரை மீண்டும் கட்டியெழுப்ப இந்த திட்டம் உதவும் என்று நான் நம்புகிறேன்.
நாட்டின் அரசியலமைப்பின் மூலம், அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதியை நாம் உறுதியளித்துள்ளோம். நீதி என்பது, அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.