ஓடும் ரெயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம்: கேரள ஐகோர்ட்டு ஊழியர் கைது
வர்க்கலாவை கடந்து திருவனந்தபுரம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒரு மாணவி திருச்சூர் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஊருக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம்போல சொர்ணூர்- திருவனந்தபுரம் வேநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார்.
அந்த ரெயில் இரவு 9 மணியளவில் வர்க்கலாவை கடந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மாணவியின் அருகில் இருந்த ஒருவர் அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனே ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது41) என்பதும், கேரள ஐகோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சதீசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.