கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து பெய்து வருகிறது.;
திருவனதபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே அதாவது மே 24-ந்தேதி தொடங்கி பெய்தது. இதையடுத்து மழை பாதிப்பு குறைந்து அவ்வபோது பெய்து வந்தது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன்படி நேற்றுமுன்தினம் மாலை முதல் இரவு வரை விடிய, விடிய மற்றும் நேற்று காலை பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன. சாலையில், மின்கம்பங்களில் மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு, மின்தடை ஏற்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில், கேரளாவில் தொடரும் கனமழையால் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட்டில் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் இன்று பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி வரையில் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தி உள்ளது.