கேரளா: 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.;
பத்தனம்திட்டா,
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே கேரளாவில் பெய்ய தொடங்கியது. 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த முறை முன்பே மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளா மற்றும் லட்சத்தீவில் இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழை அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் இன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரையிலான பலத்த தரைக்காற்று வீச கூடும்.
எனினும், நாளை முதல் 30-ந்தேதி (புதன் கிழமை) வரை காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. என்ற அளவில் சற்று வேகம் குறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி கண்ணூர், காசர்கோடு ஆகிய இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.