பாம்புக்கு வாய் வழியே செயற்கை சுவாசம்... காப்பாற்றிய ஹீரோ; குவியும் பாராட்டுகள்
கோழி பண்ணையை பார்த்ததும், இன்று நல்ல இரை கிடைத்து விட்டது என அதற்குள் பாம்பு நுழைய முயன்றது.;
திருச்சூர்,
கேரளாவில் வனவிலங்குகளுக்கு சி.பி.ஆர். எனப்படும் வாய் வழியே மூச்சு காற்றை செலுத்தி, உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதில் பிரபலம் வாய்ந்தவர் லிஜோ கச்சேரி. சமீபத்தில், மான் குட்டி ஒன்றிற்கு இதுபோன்ற ஒரு சிகிச்சையை அளித்து, அது செய்திகளில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டவர்.
இந்த முறை அவர், பாம்பு ஒன்றுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ராஜீவ் என்பவர் மந்தமங்கலம் பகுதியில், கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில், பாம்பு ஒன்று அந்த பகுதிக்கு வந்துள்ளது.
கோழி பண்ணையை பார்த்ததும், இன்று நல்ல இரை கிடைத்து விட்டது என அதற்குள் நுழைய முயன்றது. ஆனால், அதனை பாதுகாக்க அமைக்கப்பட்டு இருந்த வலையில் சிக்கி கொண்டது. இரவு முழுவதும் அதில் இருந்து வெளியே வர முடியாமல் பரிதவித்தது.
இதனை அறிந்த ராஜீவ், வன அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார். வன துறையின் துணை அதிகாரி சஜீவ் குமார் மற்றும் மற்றொரு அதிகாரியான சுருதி நாயர் தலைமையிலான குழுவினர் நேற்று காலை சம்பவ பகுதிக்கு சென்றனர். உடன் லிஜோவும் சென்றார்.
அப்போது, 5 அடி நீள பாம்பு ஒன்று வலையில் சிக்கி இருந்தது. அதன் கழுத்தில் இருந்த வலையை லிஜோ நீக்கினார். இதன்பின்னர், பாம்பின் வாய் வழியே செயற்கை சுவாசம் அளித்து, அதன் வாலை மேல்புறம் பிடித்து கீழே தொங்க விட்டும் சிகிச்சை அளித்துள்ளார். இதனால், ரத்த ஓட்டம் எல்லா இடங்களுக்கும் பரவும். அதனுடன் தொடர்ந்து மசாஜ் செய்தும் விட்டார்.
இதன்பின்னர், அந்த பாம்பிடம் பேசவும் செய்துள்ளார். நீ பாதுகாக்கப்பட்டு விட்டாய். இப்போது நீ போகலாம் என்று கூறுகிறார். அதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதன்பின்னர் அந்த பாம்பும், இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. இதனை தொடர்ந்து, லிஜோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
எனினும், பாம்புகளுக்கு இதுபோன்ற சி.பி.ஆர். சிகிச்சையை அளிப்பதற்கு, மக்கள் முன் வரவேண்டாம் என வனவாழ் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தொழில்முறை அறிவு கொண்ட நிபுணர்களே இதில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.