மோப்ப நாய்கள் வெடிகுண்டை கண்டுபிடித்ததும் இனி குரைக்காது... ஏன்? என தெரிந்து கொள்வோம்

வெடிகுண்டுகளை கண்டறிவதில் மோப்ப நாய்களுக்கு புதிய முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.;

Update:2025-07-27 18:43 IST

புதுடெல்லி,

சுதந்திர தின கொண்டாட்டங்கள் வரவுள்ள சூழலில், டெல்லி போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு முகமைகள், தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பான கொண்டாட்டம் உறுதி செய்யப்படுவதில், மோப்ப நாய்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதில், டெல்லி போலீசின் மோப்ப நாய்கள் மற்றும் அவற்றின் பயிற்சியாளர்கள், வெடிபொருட்களையும் மற்றும் போதை பொருட்களையும் கண்டறிவதில் தினசரி 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். டெல்லி போலீசின் மோப்ப நாய்கள் பிரிவில், 64 நாய்கள் உள்ளன.

இவற்றில் 40 சதவீதம் பெண் நாய்கள் ஆகும். இன்னும் 30 நாய்களை இந்த குழுவில் சேர்ப்பதற்கான திட்டமும் உள்ளது. இந்நிலையில், வெடிகுண்டுகளை கண்டறிவதில் மோப்ப நாய்களுக்கு புதிய முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதுபற்றி டெல்லி போலீசின் மோப்ப நாய்கள் பிரிவுக்கான பொறுப்பு அதிகாரியான காவல் துணை ஆய்வாளர், ஜிதேந்திரா டோக்ரா கூறும்போது, மோப்ப நாய்கள் வெடிகுண்டுகளை கண்டறிந்து விட்டால், அமைதியாக அதற்கு எதிர்வினையாற்றும்படி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏனெனில், குரைப்பது போன்ற அதிக ஒலியால் சில வகையான வெடிகுண்டுகள் வெடித்து விடும் ஆபத்து உள்ளது. அதனால், வெடிகுண்டு இருப்பது தெரிந்து விட்டால், அமைதியாக அமர்ந்து, வாலை ஆட்டுவது அல்லது பயிற்சியாளரை நோக்கி பார்ப்பது என நாங்கள் பயிற்சியை மாற்றியமைத்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.

இவை வெடிபொருட்களை கண்டறிவதுடன், போதை பொருட்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் பணியிலும் ஈடுபடுகின்றன. டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர தினத்தன்று, பாதுகாப்பை பராமரிக்க உதவ இவை பயன்படுத்தப்படுகின்றன.

ராம லீலா, ஜென்மாஷ்டமி மற்றும் ஈத் போன்ற பண்டிகை காலங்களின்போதும், பொது நிகழ்ச்சிகளின்போதும் இந்த மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், ஆண்டு முழுவதும் அவை வேலையில் ஈடுபடுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்