பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம் - 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
2047-ல் 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நோக்கி 'விக்சித் பாரத்' திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.;
புதுடெல்லி,
நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 'பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். தற்போது இந்த திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரூ.99 ஆயிரத்து 446 கோடி செலவில், 2 ஆண்டுகளில் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் 1.92 கோடி பேர் முதல் முறையாக தொழில் உலகில் நுழைவார்கள். பிரதமர் 2047-ல் 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நோக்கி 'விக்சித் பாரத்' திட்டத்தை முன்மொழிந்தார். அதன் ஒரு அங்கமாக இந்த வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் அமைந்திருக்கிறது.
இதில் ஊழியர்களை கவரும் விதமாக ஒரு லட்சத்துக்கு குறைவாக சம்பளம் பெறும் புதிய ஊழியர்களுக்கு பி.எப். (வைப்புநிதி) கணக்கில் ஒரு மாத சம்பளத்தை 2 தவணைகளாக பிரித்து செலுத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இதேபோல முதலாளிகளை கவருவதற்காக நீடித்த வேலைவாய்ப்பு வழங்கும் முதலாளிகளுக்கு ஒரு ஊழியருக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கும் முறையும் இந்தத் திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.