பள்ளி வளாகத்தில் குடிபோதையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை கூடம் அருகில் படிக்கட்டில் தலைமை ஆசிரியர் படுத்து தூங்கினார்.;

Update:2025-07-27 06:51 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தாலுகாவில் கோனல் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நிங்கப்பா பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு குடிபோதையில் வந்துள்ளார்.

போதை தலைக்கு ஏறியதால் தடுமாறியபடி வந்த அவர் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை கூடம் அருகில் படிக்கட்டில் படுத்து தூங்கிவிட்டார். இதனை பார்த்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போதையில் பள்ளி வளாகத்தில் படுத்து தூங்கிய நிங்கப்பாவை அப்பகுதி வாலிபர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர் நிங்கப்பா குடிபோதையில் தூங்கியது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் நிங்கப்பாவை பணியிடை நீக்கம் செய்து வட்டார கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்