சீனா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் செய்தி... மணிக்கு 11 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சென்று தாக்கும் இந்திய ஏவுகணை
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் அல்லது மணிக்கு 5,400 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை.;
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் நாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக ஆத்மநிர்பார் பாரத் எனப்படும் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள், தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தேவைகளை கவனத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான முக்கிய விசயங்களில் ஒன்றாக, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரித்து உள்ளது. பிராஜக்ட் விஷ்ணு என்ற பெயரிலான திட்டத்தின்படி, இந்த புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏவுகணை மணிக்கு 9,800 கி.மீ. முதல் 11 ஆயிரம் கி.மீ. வரையிலான வேகத்தில் பயணிக்க கூடியது. 1,500 கி.மீ. தொலைவிலான இலக்கை தாக்கும் திறனும் பெற்றது. இதனால், வேகம் மற்றும் தொலைவு என இரண்டிலும் தற்போது, பயன்பாட்டில் உள்ள பிரம்மோஸ் போன்ற ஏவுகணையை விட அதிக திறன் வாய்ந்த ஒன்றாக இது இருக்கும்.
சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. உற்பத்தி செய்துள்ளது. இதேபோன்று, பூமியின் ஆழத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை துளைத்து தாக்கும் உயர்திறன் பெற்ற அக்னி ஏவுகணை திட்டத்தின் மற்றொரு ஆயுதம் ஒன்றையும் உற்பத்தி செய்யும் பணியை இந்தியா துரிதப்படுத்தி உள்ளது. தற்போதுள்ள ஆயுதங்களால் சென்று தாக்க முடியாத பகுதிகளை இலக்காக கொண்டு, இந்த ஆயுதம் இருக்கும்.
சமீபத்தில், ஈரானின் அணு உலை கட்டமைப்புகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கி தகர்த்தது. அது மலைப்பிரதேசத்தில் பூமிக்கு அடியில், சென்று தாக்கி அதில், வெற்றியும் பெற்றது. இதனை தொடர்ந்தே, இந்த பணியை விரைந்து மேற்கொள்ளும் முடிவில் இந்தியா உள்ளது.
இதேபோன்று, அடுத்த தலைமுறைக்கான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் முக்கிய மைல்கல்லின் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதன்முறையாக, ஸ்கிராம்ஜெட் இயந்திர தொழில்நுட்பம், 120 விநாடிகள் வரை தரை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனை டி.ஆர்.டி.ஓ. மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் அல்லது மணிக்கு 5,400 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை. இதுதவிர, வான் பாதுகாப்பு சாதனங்களையும் ஊடுருவி, அதில் சிக்காமல் விரைவாகவும், அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய தாக்குதல்களையும் நடத்தும் திறன் பெற்றவையாகும். இதுபோன்று உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அச்சுறுத்தலாக உள்ள நாடுகளுக்கு எதிராக தேவையான ஆயுத உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.