சோழர்களின் சிறப்புகளை வருங்கால தலைமுறையினர் அறிவது அவசியம்: பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இந்திய மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்தேன் என பிரதமர் மோடி சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.;
புதுடெல்லி,
ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, திருச்சியில் இருந்து பிரதமர் மோடி தஞ்சைக்கு புறப்பட்டார். தஞ்சைக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் அங்கவஸ்திரம் என தமிழக முறையிலான பாரம்பரிய உடை அணிந்து காணப்பட்டார்.
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இறை வணக்கம் செலுத்தியதுடன், ஆடி திருவாதிரையை முன்னிட்டு, தீபாராதனை காட்டி வழிபாடும் நடத்தினார். ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அவர், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில், தஞ்சை பயணம், சோழ பேரரசர்கள் பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். சோழகால பக்தியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றான இது, ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்தது. இந்திய மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்தேன் என பதிவிட்டு உள்ளார்.
அவர் பேசும்போது, சோழ பேரரசர்கள், நம்முடைய நாட்டை வலிமைமிக்க ஒன்றாகவும் மற்றும் ஒற்றுமைக்கான மனவலிமையை இன்னும் அதிகப்படுத்துவதிலும் நமக்கு ஊக்கம் அளிக்கின்றனர் என பேசியுள்ளார். சோழர்களின் சிறப்புகளை பற்றி வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.