தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டதா? பிரதமர் மோடிக்கு, சிதம்பரம் கேள்வி
தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? என பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.;
சென்னை,
தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, 'தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிகம்' என்றார். இதற்கு பதில் அளித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 11 ஆண்டுகளில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒதுக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியையும் பிரதமர் ஒப்பிட்டுப்பார்த்தார் என்று நினைக்கிறேன்.
அவர் சொல்வது சரிதான், ஆனால் அவர் கூறிய ஒதுக்கீடுகளில் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது விதிவிலக்காகவோ எதுவும் இல்லை. இந்தியப் பொருளாதாரம் வளரும்போது, ஆண்டு பட்ஜெட்டின் அளவும் வளரும். மேலும், மொத்தச் செலவும் மற்றும் ஒதுக்கீடுகளும் கூடத்தான் செய்யும்.
உதாரணமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் 2013-14-ம் ஆண்டைய மொத்த செலவு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் 2024-25-ம் ஆண்டைய மொத்த உண்மையான செலவு என்பது முறையே ரூ.15 கோடியே 90 லட்சத்து 434 கோடி மற்றும் ரூ.47 கோடியே 16 லட்சத்து 487 கோடி ஆகும். அதன்படி பார்த்தால், இந்தியாவின் மொத்தச் செலவு 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளபோது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் அளவு 3 மடங்கு அதிகமாகி இருப்பதில் ஆச்சரியமாகவோ அல்லது விதிவிலக்காகவோ என்ன இருக்கிறது?. 10 அல்லது 11 ஆண்டுகளுக்கு பிறகு, ஒதுக்கீடுகளும் தற்போதைய ஒதுக்கீடுகளை விட 3 மடங்கு அல்லது அதைவிட ஆகி இருக்கும் என்பதுதான் இயல்பு.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.