13 வருடங்களுக்குப்பின் பால்தாக்கரே வீட்டிற்கு சென்ற ராஜ்தாக்கரே

65-வது பிறந்தநாளை கொண்டாடிய உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து ராஜ்தாக்கரே வாழ்த்து கூறினார்.;

Update:2025-07-28 05:16 IST

மும்பை,

அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே சகோதரர்கள் கடந்த 5-ந் தேதி மும்பையில் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். இது மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. பிரிந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணைந்து அரசியலில் ஈடுபடலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனினும் இதுவரை அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று உத்தவ் தாக்கரே தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை ராஜ்தாக்கரே நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இதற்காக நேற்று காலை தாதரில் உள்ள 'சிவ்தீர்த்' வீட்டில் இருந்து பாந்திராவில் உள்ள 'மாதோஸ்ரீ' இல்லத்துக்கு ராஜ்தாக்கரேவே காரை ஓட்டிச்சென்றார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர் பாலநந்காவ்கரும் இருந்தார்.

'மாதோஸ்ரீ' வாசலில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ராஜ்தாக்கரேயை வரவேற்றனர். இதேபோல உத்தவ் தாக்கரே வீடு முன் திரண்டு இருந்த தொண்டர்களும் உற்சாகமாக ராஜ்தாக்கரேயை வரவேற்று மகிழ்ந்தனர்.இதையடுத்து ராஜ்தாக்கரே, உத்தவ் தாக்கரேக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். சுமார் 20 நிமிடங்கள் 'மாதோஸ்ரீ'யில் இருந்த ராஜ்தாக்கரே அதன்பிறகு வீடு திரும்பினார்.

இது குறித்து ராஜ்தாக்கரே அவரது 'எக்ஸ்' பக்கத்தில், "எனது மூத்த சகோதரர் மற்றும் உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி நான் மரியாதைக்குரிய பால்தாக்கரேவின் வீடான மாதோஸ்ரீக்கு சென்று எனது வாழ்த்துகளை அவருக்கு கூறினேன்," என தெரிவித்து உள்ளார்.இதேபோல உத்தவ் தாக்கரேவும், ராஜ்தாக்கரேவுடனான சந்திப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகி நவநிர்மாண் சேனாவை தொடங்கினார். கட்சியில் இருந்து விலகியபோது அவர், ''மாதோஸ்ரீயிடம் மரியாதையை கேட்டேன். ஆனால் அவமானம் தான் கிடைத்தது'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பால் தாக்கரே வசித்து வந்த, மாதோஸ்ரீ என்று அழைக்கப்படும் அந்த வீட்டுக்கு, 13 வருடங்களுக்கு பின் ராஜ் தாக்கரே சென்றுள்ளார் என்பது கவனித்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்