'கூகுள் மேப்' பார்த்து பெண் ஓட்டிச் சென்ற கார் கடலில் விழுந்தது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
மும்பையில் பெண் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ‘கூகுள் மேப்' பார்த்து ஓட்டிச்சென்ற கார் கடலில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
மும்பை,
மும்பையை அடுத்த நவிமும்பை பேலாப்பூரில் இருந்து உல்வே நோக்கி நள்ளிரவு 1 மணியளவில் பெண் ஒருவர் தன்னந்தனியாக காரில் சென்றார். பெண்ணுக்கு உல்வே செல்லும் வழி தெரியவில்லை. எனவே 'கூகுள் மேப்' பார்த்தபடி காரை ஓட்டிச்சென்றார். இதில் பேலாப்பூர் துருவ்தரா படகுதுறைமுக பகுதியில் சென்றபோது பாதையை சரியாக கணிக்க தவறினார். காரை பாலத்தின் வழியாக ஓட்டிச் செல்வதற்கு பதில், கீழ்பகுதி வழியாக சென்றார்.'கூகுள் மேப்'பிலும் நேராக பாதை இருப்பது போல காட்டியது. இதனால் பெண்ணும் பாலத்துக்கு கீழ் பாதை இருக்கும் என நினைத்து காரை வேகமாக செலுத்தினார்.
அப்போது திடீரென பாதை முடிந்து தண்ணீர் வந்தது. எனினும் பெண் சுதாரிப்பதற்குள் கார் கடலின் முகத்துவார பகுதிக்குள் பாய்ந்தது. நள்ளிரவு நேரத்தில் ஆபத்தில் சிக்கி கொண்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் கடல் பாதுகாப்பு படையினர் அங்கு ரோந்து பணியில் இருந்தனர். அவர்கள் படகில் விரைந்து சென்று மூழ்கும் காரில் பரிதவித்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும் கார் நீரில் மூழ்கியது. பின்னர் கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. சரியான நேரத்தில் கடல் பாதுகாப்பு படையினர் காப்பாற்றியதால், அந்த பெண் உயிர் தப்பினார். உயிரை காப்பாற்றிய அவர்களுக்கு அந்த பெண் நன்றி தெரிவித்து கொண்டார். விபத்தில் சிக்கிய அந்த பெண் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.