பொம்மை என நினைத்து பாம்பை பிடித்து கடித்த 1 வயது குழந்தை... அடுத்து நடந்த சம்பவம்
கோவிந்தாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.;
கோப்புப்படம்
பெட்டையா,
பீகாரின் பெட்டையா கிராமத்தில் வசித்து வருபவர் மாதேஸ்வரி தேவி. இவருடைய 1 வயது மகன் கோவிந்தா. சமையல் செய்வதற்கு அடுப்பில் எரிக்க தேவையான குச்சிகளை எடுப்பதற்காக தேவி வனப்பகுதிக்கு சென்று விட்டார்.
வீட்டில் கோவிந்தாவின் பாட்டி இருந்துள்ளார். தன்னுடைய தாயாரான அவரிடம் குழந்தையை பாதுகாப்பாக விட்டு விட்டு, தேவி சென்றுள்ளார். அப்போது நாக பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. குழந்தையை பார்த்ததும் அதனை நெருங்கி சென்றுள்ளது. குழந்தை கோவிந்தாவுக்கு அது என்னவென தெரியவில்லை. பொம்மை என நினைத்து அமைதியாக இருந்து விட்டது.
ஒரு கட்டத்தில், குழந்தையின் கையில் அது கொடி போல் சுற்றி கொண்டது. ஆனால், அது விரைவாக நெளிந்து, நெளிந்து சென்றதில் குழந்தைக்கு ஏதோ தோன்றியுள்ளது. அதனை விளையாட்டு பொருளாக கையில் எடுத்தது. இதன்பின்னர் என்ன நினைத்ததோ, அந்த பாம்பின் உடலில் பற்களால் கடித்து வைத்துள்ளது. இதில், அந்த பாம்பு உடனே இறந்து விட்டது.
இதன்பின்னர், கோவிந்தாவும் சுயநினைவற்று விழுந்து விட்டான் என கூறப்படுகிறது. உடனடியாக கோவிந்தாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் பாம்பு, குழந்தையை கடிக்கவில்லை. அதன் விஷம் எதுவும் குழந்தையின் உடலில் ஏறவில்லை என தெரிவித்தனர். எனினும், கோவிந்தா தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளான். நாக பாம்பு மனிதனை கடித்து விட்டால், அதன் விஷம் சில மணிநேரங்களில் ஏறி, கடித்த நபரை கொன்று விடும்.
அந்த அளவுக்கு வீரியம் வாய்ந்தது. ஆனால், ஒரு வயது குழந்தையிடம் அது விளையாட்டாக எதுவும் செய்யாமல் இருந்துள்ளது. எனினும், குழந்தை கடித்ததில் அந்த பாம்பு உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.