டிஜிட்டல் கைது மோசடி; முதியவரை ஏமாற்றி ரூ.95 லட்சம் பறித்த சகோதரர்கள் கைது

முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மராட்டிய மாநிலத்தில் வசித்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.;

Update:2025-07-26 17:10 IST

மும்பை,

சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்து வருகின்றனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற 'டிஜிட்டல் கைது' மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவரிடம் மர்ம நபர்கள் 'டிஜிட்டல் கைது' மோசடியை அரங்கேற்றி ரூ.95 லட்சத்தை பறித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் மூலம், முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மராட்டிய மாநிலம் மிரா ரோடு பகுதியில் வசித்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், முகமது இக்பால் பாலாசாகேப்(47) மற்றும் அவரது சகோதரர் ஷைன் இக்பால் பாலாசாகேப்(41) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்