மும்பையில் எக்ஸ்பிரஸ்வே சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதி 20 வாகனங்கள் சேதம்

மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் பிரேக் பழுதான லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-07-27 04:29 IST

மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை லோனாவாலா-கண்டலா வனப்பகுதி அருகே லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் திடீரென பிரேக் செயலழந்தது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற கார்கள் உள்பட மொத்தம் 18 முதல் 20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனால் வாகனங்கள் சேதமடைந்து சாலையில் சிதறியது. திடீரென நடந்த விபத்தினால் வாகனத்தில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள இறங்க முயன்றனர். இருப்பினும் லாரி மோதிய விபத்தில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த லாரி ஒரு பெரிய வாகனத்தின் மீது மோதி நின்றது.

எதிர்பாராவிதமாக நடந்த விபத்தினால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தபித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த 16 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மும்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக சுமார் 5 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வாகன நெரிசல் ஏற்படா வண்ணம் அந்த சாலையில் வந்த வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் மற்ற 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்