நகைக்கடையில் துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை; முகமூடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு

கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2025-07-27 05:54 IST

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாஜோஹள்ளியில் கன்னையா லால் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கன்னையா லால் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்தனர். அப்போது முகமூடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் கடைக்குள் திடீரென்று புகுந்தார்கள். தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி கடையில் இருந்த தங்க நகைகளை ஒரு சாக்கு பைக்குள் அள்ளி போட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத கன்னையா லால் திருடர்கள்... திருடர்கள்... என கத்தி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் அங்கு ஓடி வந்தனர்.

இதனால் கையில் கிடைத்த நகைகளுடன் மர்மநபர்கள் அங்கிருந்து வெளியே வந்தனர். அப்போது அவர்களை ஒருவர் தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் தள்ளிவிட்டு அங்கு தயாராக இருந்த காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த முகமூடி ஆசாமிகள் கடையில் இருந்த 184 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முகமூடி ஆசாமிகள் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்