ரம்புட்டான் பழம் தொண்டையில் சிக்கி 1 வயது குழந்தை பலி

ரம்புட்டான் பழத்தை குழந்தை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தது.;

Update:2025-07-27 07:38 IST

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பெருசேரில் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா. இவரது 1 வயது மகன் அவ்யந்த். ஆதிரா, தனது குடும்பத்துடன் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே மருது சந்திப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

நேற்று மாலை 5 மணியளவில்குழந்தை அவ்யந்த் தனது பாட்டியுடன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் வாங்கி வைத்திருந்த ரம்புட்டான் பழத்தை கையில் வைத்து விளையாடி கொண்டு திடீரென வாயில் போட்டு விழுங்கியுள்ளான். இதில் பழம் தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக பெரும்பாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையின் தொண்டையில் சிக்கிய பழத்தை எடுக்க டாக்டர்கள் முயன்றனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக இறந்துபோனது.

இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரும்பாவூர் அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்