பள்ளி மாணவர்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா..?
இந்த புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கி உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கையாக கருதப்படும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்போது பள்ளி மாணவர்களுக்கு அறிமுகமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மே 7-ம் தேதி இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" எனும் துல்லிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதன் மகத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கி உள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன? என்பதையும், தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு பங்கு வகிக்கின்றன? என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் இது தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது. இதில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.