என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே... காதலன் வீட்டின் முன்பு பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு

வாசு என்பவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார்.;

Update:2025-07-27 08:22 IST

நகரி,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஓடுகுண்டாவைச் சேர்ந்த கோபாலின் மகள் பிரசாந்தி (வயது 24). இவர், புரோட்டூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பெண் போலீசாக வேலைப் பார்த்து வந்தார். இவரும், சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த மார்வாடா கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவரும் ஏற்கனவே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலைப் பார்த்தபோது அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். வாசு 6 மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவன வேலையை விட்டு விட்டு குப்பத்தை அடுத்த மார்வாடா கிராமத்துக்கு வந்து விட்டார். கடந்த சில மாதங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்த தன்னுடைய காதலன் வாசுவை பார்க்க பெண் போலீஸ் பிரசாந்தி ஓரிரு நாட்களுக்கு முன்பு மார்வாடா கிராமத்துக்கு வந்து வாசுவை பற்றி விசாரித்தார்.

அப்போது வாசு திருமணம் ஆனவர் எனத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பிரசாந்தி, வாசுவிடம் என்னை காதலித்து ஏமாற்றி விட்டாயே எனக்கூறி வாக்குவாதம் செய்தார். வாசுவுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான தகவலை கேள்விப்பட்ட பிரசாந்தியின் பெற்றோர் குப்பத்துக்கு வந்து மகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

எதிர்பாராத விதமாக சம்பவத்தன்று இரவு மீண்டும் பெண் போலீஸ் பிரசாந்தி தனது காதலன் வீட்டுக்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரை பார்த்த அக்கம் பக்கத்தினர் பிரசாந்தியை மீட்டு தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் பிரசாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் வாசு கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்