வரதட்சணை கொடுமை... மனைவியை மிரட்ட 8 மாத குழந்தையை தலைகீழாக வீதியில் தூக்கிச் சென்ற நபர்
வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் வேண்டும் என்று கேட்டு சஞ்சு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சஞ்சு மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, சஞ்சுவின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், வரதட்சணை கேட்டு தனது மனைவியை மிரட்டுவதற்காக, பிறந்து 8 மாதங்களே ஆன தனது குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி சஞ்சு வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த ஊர்மக்கள் இது குறித்து கேட்டபோது, தனக்கு பணம் வேண்டும் என்றும், இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சஞ்சு கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே சமயம், சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் இடுப்பு எலும்பு இடம்பெயர்ந்துள்ளதாகவும் சஞ்சுவின் மனைவி தெரிவித்துள்ளார்.