கால சர்ப்ப தோஷம் நீங்க.. நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாடு

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.;

Update:2025-07-24 13:21 IST

ஜாதகத்தில் ராகு கேது தோஷம், சர்ப்பதோஷம், கால சர்ப்ப தோஷம் எல்லாமே நாகங்களை முன்னிறுத்தி ஏற்படக்கூடிய தோஷங்கள் ஆகும். இந்த சர்ப்பதோஷம் இருந்தால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை, பிரிவினை, புத்திர பாக்கியம் தாமதப்படுதல், குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை ஆகியவை இருந்துகொண்டே இருக்கும். குடும்ப வளர்ச்சி மிகவும் சுமாராகவே இருக்கும்.

இந்த நாக தோஷத்தை நீக்க கூடிய நாளாக நாக சதுர்த்தி, கருட பஞ்சமி அமைகிறது. மீள முடியாத வினைப்பயனில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டையும் ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்துகின்றனர். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு உண்டு. கருட பஞ்சமியன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

நாக சதுர்த்தி அன்று முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து விரதம் இருக்க வேண்டும். தங்களது உடல் நலத்திற்கு ஏற்ப பால் பழம் சாப்பிட்டுக்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். கருட பஞ்சமி அன்று கருடனை வழிபடுவதுடன், நாகாத்தம்மன், நாகம்மன் புற்றுக்கண் ஆலயங்களுக்குச் சென்று முறைப்படி பால் பழம் நெய்வேத்தியம் செய்தும் வழிபட்டு வரலாம்.

நாகப்பிரதிஷ்டைகளுக்கு அபிஷேகங்கள் செய்து மஞ்சள் பூசி குங்கும திலகமிட்டு மலர்களால் அலங்காரம் செய்து பொங்கல், பாயாசம் போன்ற நெய்வேத்தியங்கள் செய்து நாகரை வழிபடலாம். இதன் மூலம் கால சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு 28.7.2025 (ஆடி 12) அன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. 29.7.2025 (ஆடி 13) அன்று கருட பஞ்சமியும், நாக பஞ்சமியும் இணைந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்