திருத்தணியில் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.;
ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். கிருத்திகை, விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் பொது தரிசன வழியில் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். இதேபோல் 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மலைமேல் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். மலையடிவாரத்தில் இருந்து கோவில் பஸ்கள் மூலம் பக்தர்கள் அனைவரும் மலைக் கோவிலுக்கு சென்று வந்தனர். அரக்கோணம் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.