சிங்கிலிகுப்பம் புற்று நாகவல்லி அம்மன் கோவிலில் தீமிதி விழா
தீமிதி நிகழ்ச்சியில் சுமார் 150 பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆயிலச்சேரி ஊராட்சியை சேர்ந்த சிங்கிலிகுப்பம் கிராமத்தில் அருள்மிகு புற்று நாகவல்லி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 7-வது ஆண்டு தீமிதி விழா, கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன்பின்னர் பால்குட ஊர்வலம், காப்புக் கட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், அம்மன் பூங்கரகம் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் அம்மன் திருப்பதியம் வர்ணித்தல், அலகு தரித்தல், அக்னி கொப்பரை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று காலை சிங்கிலிகுப்பம் கங்கையம்மன் ஆலயத்தில் இருந்து அம்மன் பூங்கரகம் அலங்கரிக்கப்பட்டு, புற்று நாகவல்லியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. இதன் பின்னர், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் யாகம் தீ மூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில், காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் எனப்படும் பக்தர்கள் கிராம எல்லையில் புனித நீராடினர். பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன், கிராம எல்லைக்கு சென்று குமார மக்கள் எனப்படும் பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவர்கள் கோவிலை அடைந்ததும், கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். சுமார் 150 பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமையில் கன்னிகாபுரம், சிங்கிலிகுப்பம் ஆலய திருப்பணி குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், விழா குழுவினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.