திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.;
திருப்பதி,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று வைகானச ஆகம சாஸ்திரபடி வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. அதையொட்டி உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் யாக சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன்பிறகு சாத்துமுறை மற்றும் ஆஸ்தானம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்திருச்சி வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் இரவு பவித்ர பிரதிஷ்டை மற்றும் சயனாதிவாசம் உள்ளிட்ட சடங்குகள் நடந்தது.
பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி ரவி, கண்காணிப்பாளர் முனிசேகர், ஆய்வாளர் சுரேஷ் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.