திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவித்ர சமர்ப்பணம்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது.;
திருமலை,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் 2-வது நாளான நேற்று பவித்ர சமர்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக காலை சுப்ரபாத சேவை, தோமாலா சேவை, சகஸ்ர நாமார்ச்சனை நடத்தப்பட்டது. இதையடுத்து உற்சவர்களான சீதா, லட்சுமணர் சமேத ராமரை யாக சாலைக்கு கொண்டு வந்து விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவசனம், கும்பாராதனை மற்றும் உக்த ஹோமங்கள் நடத்தப்பட்டது.
உற்சவர் ராமருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், தயிர், தேன், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. யாக சாலையில் பவித்ர மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு மூலவர்கள், உற்சவர்கள், விஷ்வக்சேனர், துவார பாலகர்கள், பாஷ்யகாரர், கருடாழ்வார், யாக சாலை ஹோம குண்டங்கள், கொடிமரம், பலிபீடம், கோவில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரவு உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து யாக சாலையில் வேதப் பாராயணங்கள், ஹோமங்கள் போன்ற வைதீக காரியக்கர்மங்கள் நடந்தன.