நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஏகாதச ருத்ர மஹா யாகம்
ஏகாதச ருத்ர யாகத்தைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.;
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர மஹா யாகம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சியும், காலை 6.10 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யத்தைத் தொடர்ந்து மஹன்யாசம் மற்றும் ஏகாதச ருத்ர பாராயணம், அக்னிகார்யம், விசேஷ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மஹா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளை சிவாகம பாஸ்கர சிவஸ்ரீ லக்ஷ்மண குமார சிவம் தலைமையில் ஆலய அர்ச்சகர்கள் சிவஸ்ரீ அசோக்குமார் பட்டர், சிவஸ்ரீ வெங்கட்ராமன் ஆகியோர் செய்தனர்.
யாகத்தைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவாசக சபை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.