ஆடி கடைசி ஞாயிறு: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். ஆடி மாதம் துவங்கியதில் இருந்து பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவியத்தொடங்கினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து கோவிலை வலம் வந்தும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் கோவில் முன்புறம் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
அதேபோல், இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கருமாரியம்மன் கோவில், கூத்தூர் அன்னகாமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.