ராமேஸ்வரம் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம் - உலக நன்மைக்காக சிறப்பு பூஜை
ஜப்பான் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினர்.;
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று தமிழகத்தை சேர்ந்த கோபால் சுப்பிரமணி என்பவரது தலைமையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினர்.
பின்னர் கோவிலின் எதிரே உள்ள ஒரு மடத்தில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்களுடன் ஜப்பான் நாட்டினர் கோவிலுக்கு சென்று சாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் 3-ம் பிரகார தூண்களின் அழகையும் கண்டு ரசித்தனர்.