திருப்பதி எஸ்.வி. கோசாலையில் 16-ந்தேதி கோகுலாஷ்டமி விழா

கோகுலாஷ்டமி விழாவிற்காக ‘கோகுலம்’ போல் தோற்றமளிக்கும் வகையில் கோசாலையில் பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட உள்ளது.;

Update:2025-08-11 11:40 IST

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி. கோசாலை திருப்பதியில் உள்ளது. அங்கு, 16-ந்தேதி கோகுலாஷ்டமி விழா நடக்கிறது. அதையொட்டி கோசாலையில் கோபூஜை, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

‘கோகுலம்’ போல் தோற்றமளிக்கும் வகையில் கோசாலையில் பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட உள்ளது. அங்கு பெரியபந்தல் அமைத்தல், தேரணவாயில்கள் கட்டுதல், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்தல், கோசாலையில் உள்ள மாடுகளை அழகுபடுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.

இந்து மதத்தில் பசுவானது ‘கோமாதா’ என அழைக்கப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவதைகளின் பிரதிநிதியாகக் கருதி கோமாதாவை பக்தர்கள் வணங்குகின்றனர். ஆகையால் பசுவுக்கு உணவு கொடுப்பது மகா புண்ணியமாக கருதப்படுகிறது. எனவே கோசாலைக்கு வரும் பக்தர்கள் வெல்லம், பச்சரிசி, தீவனம் போன்றவற்றை நேரடியாக பசுமாடுகளுக்கு உணவாக அளிக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. எனவே பக்தர்கள் கோமாதாவின் அருளை பெறும் வகையில் கோசாலையில் உள்ள பசுமாடுகளுக்கு தீவனம் அளிக்கலாம்.

கோகுலாஷ்டமி நாளில் எஸ்.வி. கோசாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 16-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை வேணு கானம், திருமலை வேதப்பாடசாலை மாணவர்களால் வேதப் பாராயணம், தாச சாஹித்ய திட்ட கலைஞர்களின் பக்தி பாடல்கள், கோலாட்டம் நடக்கின்றன.காலை 10.30 மணியில் இருந்து 11 மணி வரை வேணுகோபாலசாமி கோவிலில் கோபூஜை, ஆரத்தி, காலை 11 மணியளவில் கலாசார நிகழ்ச்சிகள், வேணுகோபாலசாமியை வழிபட பக்தர்களுக்கு அனுமதி, பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்து தர்ம பிரசார பரிஷத் திட்ட கலைஞர்களால் ஹரிகதா நிகழ்ச்சி நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்