விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
திருவண்ணாமலை,
உலக புகழ் பெற்ற திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் சிவனின் அக்னி தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபம் மிகவும் புகழ்பெற்றதாகும். பவுர்மணி கிரிவலத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மலையை சுற்றி 14 கி.மீ. நடந்து செல்வார்கள்.
இந்நிலையில், சமீப காலமாகவே அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திர பக்தர்கள் மற்றும் வடமாநில பக்தர்கள் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று திருவண்ணாலையில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பல மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்லவும், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம் வழியாக வெளியே வரவும் அனுமதிக்கப்பட்டனர்.