திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக இருப்பது ஏன்?

நக்கீரர் தான் குகையிலிருந்து விடுபட முருகப்பெருமான் அருள்புரிந்த திருப்பரங்குன்றத்தையே முதல் படைவீடாக வைத்து நூலைத் தொடங்குகிறார்.;

Update:2025-08-11 15:55 IST

முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என்று ஆறு படை வீடுகள் இருக்கின்றன. முருகனின் குழந்தைப் பருவத்தை மையமாக வைத்துதானே, படைவீடு வரிசை அமைந்திருக்க வேண்டும். ஆனால் தெய்வானையை மணம் முடித்த திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக அமைய என்ன காரணம் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கான காரணத்தை பார்ப்போம்.

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, நக்கீரர் தவம் செய்துகொண்டிருந்தார். (அந்தப் பாறை 'நக்கீரர் பஞ்சாட்சரப் பாறை' என்று அழைக்கப்படுகிறது). அப்போது அங்கிருந்த அரச மரத்தில் இருந்து சருகு ஒன்று கீழே இருந்த நீரில் விழுந்தது. அந்த சருகு நீருக்குள் பாதியும், நீருக்கு மேலாகப் பாதியும் இருந்தது. நீருக்கு மேலாக இருந்த பகுதி பறவையாகவும், தண்ணீருக்குள் இருந்த பகுதி மீனாகவும் மாறின. மீன் தண்ணீருக்குள் இழுக்க, பறவை மேல் நோக்கி இழுத்தது. அப்போது ஏற்பட்ட சலசலப்பில் நக்கீரரின் தவம் கலைந்தது.

அவர் மீன் நீருக்குள் இழுப்பதையும் பறவை மேலே இழுப்பதையும் கண்டு அதிசயித்தார். மீனையும், பறவையையும் இணைக்கும் பகுதியை, தன் கை நகத்தால் பிரித்தார். அடுத்த விநாடியே மீனும் பறவையும் இறந்தன. அதற்காகவே காத்திருந்ததைப் போல, உக்கிரன், அண்டா பரணன் எனும் இரண்டு பூத கணங்கள் வந்து, நக்கீரரைப் பிடித்து ஒரு குகைக்குள் தள்ளி பாறையைப் போட்டு வாசலை மூடின.

அந்தத் துயரில் இருந்து விடுபட, முருகப்பெருமானைத் துதித்து அந்த நேரத்தில் நக்கீரர் பாடிய பாடல்களே 'திருமுருகாற்றுப்படை' என அழைக்கப்படுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் தன் கையில் இருந்த வேலை ஏவ, அது குகைப் பாறையைப் பிளந்து நக்கீரருக்கு விடுதலை அளித்தது. முருகப்பெருமானின் வேல் பிளந்த அடையாளத்தை, இன்றும் திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் பெரும்பாறையில் காணலாம்.

திருமுருகாற்றுப்படை பாடியதால் தன் துயர் நீங்கிய நக்கீரர், அந்த நூலில் முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஆறு எனக் குறிப்பிட்டுள்ளார். ஆற்றுப்படை வீடுகளான அவையே, 'ஆறுபடை (அறுபடை) வீடுகள்' என அழைக்கப்படுகின்றன.

'ஆற்றுப்படுத்துதல்' என்பதற்கு 'வழிப்படுத்துதல்' என்பது பொருள். அந்த முறைப்படி துயரங்களில் சிக்கித் தவிப்பவர்களை வழிப்படுத்தும் நூலே திருமுருகாற்றுப்படை. நக்கீரர் தந்த வரிசைப்படி முதல் படைவீடு, திருப்பரங்குன்றம். நக்கீரர் தான் குகையிலிருந்து விடுபட அருள்புரிந்த திருப்பரங்குன்றத்தையே முதல் படைவீடாக வைத்து, நூலைத் தொடங்குகிறார். அதனால்தான், திருப்பரங்குன்றம், முருகனின் ஆறு படைவீடுகளில் முதல் படைவீடாக இடம்பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்