திருவள்ளூரில் தீமிதி விழா: கொட்டும் மழையில் நனைந்தபடி தீ மிதித்த பக்தர்கள்
பக்தர்கள் மழையில் நனைந்தவாறும், வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று குடைபிடித்தபடியும் தீமிதி நிகழ்வை கண்டுகளித்தனர்.;
திருவள்ளூர் நகராட்சி நேதாஜி சாலையில் அமைந்துள்ள திரௌபதி அம்பாள் சமேத தர்மராஜா திருக்கோவிலில் தீமிதி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
தீமிதி நிகழ்வு தொடங்கியபோது மழை பெய்ய ஆரம்பித்தது. எனினும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் மழையில் நனைந்தவாறும், வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று குடைபிடித்தபடியும் தீமிதி திருவிழாவை கண்டு களித்தனர். இந்நிகழ்வை அடுத்து வாண வேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா மழையிலேயே நடைபெற்றது.
கன்னிகைப்பேர்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம், குளத்துமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் 13-ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மழை பெய்த போதும், காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவரங்க ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோவிலில் இருந்து மழையில் நனைந்தபடி சக்தி கரகத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், வேல் குத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று மாலை கும்பம் படையல் இடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.