ஆடி அமாவாசை.. நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.;

Update:2025-07-24 11:09 IST

இந்துக்களின் முக்கியமான விஷேச நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். இந்த நாளில் கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறுவதுடன், அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

அவ்வகையில் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த ஆடி அமாவாசையான இன்று, நீர்நிலைகளில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். அங்கு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இன்று காலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். மேலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பகலில் நடை சாத்தப்படாமல், தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மூலவர் வீரராகவப் பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

 

மாமல்லபுரம் கடற்கரை மற்றும் திருக்குளம் பகுதியில், ஏராளமானோர் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

இரணியல் வள்ளியாற்றின் கரை ஸ்ரீ செல்வராஜ கணபதி திருக்கோவில் சேவா அறக்கட்டளை சார்பாக இன்று வள்ளியாற்றின் கரையில் ஆடி அமாவாசை தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.

 

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து வழிபடுவதற்காக இன்று அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். ஆற்றில் நீராடிவிட்டு, வேதவிற்பனர்கள் மந்திரம் ஓத, எள், பச்சரிசி, வெல்லம், தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இங்குள்ள ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சோழவந்தான் வைகை ஆற்றின் அருகே வரத விநாயகர் கோலிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அணைப்பட்டி வைகை ஆற்றிலும் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் காவிரி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர் .

 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோதையார், பரளியார் ஆகிய நதிகள் இணைந்து தாமிரபரணியாக உருவெடுக்கும் "குமரி சங்கமான" மூவாற்று முகம் ஆற்றோரம் இன்று ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பலி தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர். பிதுர் தர்ப்பணம் முடிந்து, ஆற்றில் நீராடிய பின்னர் அருகில் உள்ள மூவாற்றுமுகம் பூதத்துறை ஸ்ரீகண்டன் சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்