இன்று ஆடி அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள், புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அதன்பின் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.;
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வகையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் ஶ்ரீ வைத்திய வீரராக பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
வெளியூர் பக்தர்கள் பலர் நேற்று இரவே வந்துவிட்டனர். இதனால் பக்தர்கள் தங்கும் இடம் அனைத்தும் நிரம்பி, கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் பக்தர்கள் படுத்து தூங்கினர். அப்போது திடீரென மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் நனைந்து அவதியடைந்தனர்.
இன்று அதிகாலை ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று மூலவர் வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்தனர்.