நீண்ட வரிசையில் காத்திருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்

பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், மொட்டை அடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.;

Update:2025-07-24 12:16 IST

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். அவ்வகையில் ஆடி மாதம் தொடங்கி உள்ள நிலையில் அம்மன் கோவில்கள் களைகட்டி உள்ளன.

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்தவண்ணம் உள்ளது. சாதாரண அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட வருவார்கள். ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் வருகை தந்தனர். தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து, துலாம் பாரம் கொடுத்து, அலகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூழ், பானகம் பிரசாதமாக வழங்கப்பட்டது

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்காக, கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்