அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன? பட்டியலிட்ட ஜி.கே.மணி
ராமதாஸுடன் உள்ளதால் தன்னை எதிர் தரப்பினர் வாட்டி வதைப்பதாக ஜி.கே.மணி வேதனை தெரிவித்தார்.;
FILEPIC
சென்னை,
பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதுடன், அவரே நீடிப்பார் என்றும், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும், பொதுக்குழுவுக்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலும், அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட வேண்டும் என்றும் கட்சியின் விதியில் திருத்தம் செய்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன? என்பது குறித்து பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ஜி.கே.மணி பட்டியலிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
* மைக்கை தூக்கிப் போட்டதுடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது.
* தைலாபுரத்தில் நடந்த மா.செ.கூட்டத்திற்கு, 100 மா.செ.க்களை வராமல் தடுத்தது
* சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது.
* சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது
* ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
* அனுமதி பெறாமல் பொதுக்குழுவில், தனி இருக்கை, துண்டு வைத்து, 'ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க' வேண்டியது.
* அனுமதியை மீறி 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணம் கபட நாடகம்
* ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல்வது
* புகைப்படம், பெயர் விவகாரத்தில் ராமதாஸ் வலியுறுத்திய பின்னரும், கூட்டங்களில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசிவருவது.
* பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டது.
* ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டி, அவருக்கே தனி இருக்கை வைத்து துண்டு அணிவித்தது.
* பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது.
* ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது.
* ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கேலி கிண்டல் செய்தது.
* ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது செல்லாது
* மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது.
16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததாக ஜி.கே.மணி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தன்னிடம் பெரிய திட்டம் உள்ளதாக ராமதாஸ் என்னிடம் கூறினார். ராமதாஸுடன் உள்ளதால் தன்னை எதிர் தரப்பினர் வாட்டி வதைக்கின்றனர். முகநூலில் ராமதாஸையும் அன்புமணி தரப்பினர் வாட்டி வதைக்கின்றனர் என்றார்.