ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் நகை திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர்: நெல்லை வழக்கில் திடுக் தகவல்

பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிய போலீஸ்காரர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-07-26 05:11 IST

நெல்லை,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி (வயது 43). ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தங்கமாரி தனது குடும்பத்தினருடன் நெல்லை பெருமாள்புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.கடந்த 16-ந்தேதி தங்கமாரி குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டார். மதியம் சாப்பிடுவதற்காக மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்த நிலையில் இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். செல்போன் ஆய்வின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கமாரியுடன் நட்பு ரீதியாக பழகி வந்த மற்றொரு போலீஸ்காரர் மணிகண்டன் (31) என்பவர் மீது சந்தேகம் வலுத்தது.கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மணிகண்டனும் தங்கமாரி குடியிருந்துவரும் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.

தங்கமாரியுடன் நட்புடன் பழகிவந்த மணிகண்டன் அவரது வீட்டில் நகைகள் இருப்பதை எப்படியோ அறிந்து கொண்டார். எனவே, அவர் தனது நண்பரான கடையநல்லூரை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.திருட்டு சம்பவம் நடந்த 2-வது நாள் சென்னையில் நடந்த போலீஸ் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக மணிகண்டன் சென்றிருந்தார். போலீசார் அவரை அங்கு சென்று கைது செய்தனர்.அதன்பின்னர் முகமது அசாருதீனையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்துதான் நகை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. போலீஸ்காரர் மணிகண்டன் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார்.எனவே, தங்கமாரி வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடிக்க முடிவு செய்தார். இதற்கு தனது நண்பரான முகமது அசாருதீன் உதவியை நாடி திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று தங்கமாரி வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மணிகண்டன் வாட்ஸ்-ஆப் கால் மூலம் முகமது அசாருதீனை தங்கமாரியின் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.வீட்டின் கீழே நின்ற மணிகண்டன், அந்த வீட்டில் எந்த பொருள் எங்கு உள்ளது என்ற தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி முகமது அசாருதீன் வீட்டுக்குள் சென்று நகைகளை திருடினார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்