காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.;
சென்னை,
வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (26-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.