'கட்சி பெரிதல்ல, மக்கள் பணிதான் முக்கியம்': நெல்லை திமுக நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு
நெல்லை திமுக நிர்வாகி ஒருவர் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.;
நெல்லை,
நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை தொடர்பாக அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவரும், திமுக நிர்வாகியுமான ஒருவர் நேற்று வாட்ஸ்-அப் குழுவில் ஒரு ஆடியோவை வௌியிட்டுள்ளார்.
அதில, ''மாநகராட்சி பணிக்கு நிதி இல்லை என்று கூறும் அரசு, நாங்கள் பிச்சை எடுத்து தருகிறோம், எங்கள் வார்டுகளில் பணிகளை செய்ய தொடங்குங்கள். இல்லையென்றால் நாம் ஓட்டு கேட்டு போக முடியாது. என்னை நீங்கள் எதிரியாக நினைத்தால், நானும் அ.தி.மு.க. போல தி.மு.க.வுக்கு எதிராக போஸ்டர் ஒட்ட வேண்டிய நிலை ஏற்படும். எனக்கு கட்சி பெரிதல்ல, மக்கள் பணி தான் முக்கியம்.
35 வருடமாக ஒரு பாலத்திற்கு போராடிக் கொண்டு இருக்கிறோம். நமது ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மேயர் நீங்களே பாருங்க. பாலம் அமைத்து கொடுக்கவில்லை என்றால் அடுத்த மாநகராட்சி கூட்டத்துக்கு மக்களை திரட்டி சாக்கடை கொண்டு வந்து மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்'' என்று கூறியுள்ளார். இது நெல்லை மாநகர திமுகவினர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.